 |
|
|
மும்பை : பத்திரிகையாளர் ஜோதிர்மய் டே வழக்கில் மும்பையை சேர்ந்த பிரபல ஆங்கில நாளிதழின் மூத்த பெண் பத்திரிகையாளரை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் வெளி யாகும் மிட்&டே ஆங்கில நாளிதழின் கிரைம் செய்தி பிரிவு ஆசிரியர் ஜோதிர்மய் டே (56), கடந்த ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக மும்பை தாதா சோட்டா ராஜனின் கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, இவர்களுக்கு துப்பாக்கி சப்ளை செய்த வினோத் அஸ்ரானி, தீபக் சிசோடியா ஆகியோர் சிக்கினர்.
சோட்டா ராஜன் உத்தரவின் பேரில் டே கொல்லப்பட்டதாக விசாரணையில் உறுதியானது. தனது பரம எதிரியான தாவூத் இப்ராகிமுடன் நெருக்கமாக இருந்ததால் டேயை கொல்ல முடிவு செய்ததாக சோட்டா ராஜன் சமீபத்தில் கூறினான். இதற்கிடையே, மும்பை போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், டேவின் மொபைல் போன் எண், அவருடைய பைக் பதிவு எண் போன்ற விவரங்களை பிரபல ஆங்கில பத்திரிகையான ‘ஏசியன் ஏஜ்’&ல் பணியாற்றும் மூத்த பெண் பத்திரிகையாளர் ஜிக்னா ஓராவிடம் இருந்து சோட்டா ராஜன் பெற்றதாக கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஓராவை பலமுறை அழைத்து விசாரித்த போலீசார், நேற்று திடீரென கைது செய்தனர். சிறப்பு மொக்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. |