 |
|
|
யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் 1987இல் கொழும்பு நட்புறவுச் சங்கத்தின் யாழ். கிளையாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனமானது 2001 முதல் இன்று வரை சுதந்திரமான தன்னார்வத் தொண்டு நிறுவனமாகச் சேவையாற்றி வருகின்றது. யுத்தத்தின் போதும் வேறு காரணங்களாலும் அங்கவீனமாகி வலுவிழந்து செய்வதறியாது வீடுகளில் முடங்கி இருப்பவர்களை மாற்று வலுவுள்ளவர்களாக சமூகத்தில் செயற்பட வைப்பதே இந்நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும்.
எனவே இதற்காக செயற்கை அவயவங்களையும் சார்பு உறுப்புகளையும் நடமாடும் உபகரணங்களையும் நவீன தொழில்நுட்பத்தில் ஒவ்வொருக்கும் பொருத்தமான வகையில் தயாரித்து வழங்குவதுடன் அவர்களின் தேவைகளுக்கேற்ப இயன் மருத்துவச் சேவைகளையும் வழங்கி வருவது இதன் பிரதான பணியாகும்.
குடாநாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் சிறப்பான சேவையை வழங்கி வரும் இந்நிறுவனம் நீண்ட கால அனுபவமும் ஆசிய நாடுகளுக்கு பொருத்தமான நவீன தொழில்நுட்பமும் கொண்டு உள்நாடு, வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்களின் சேவையும் எல்லா மாவட்டங்களிலும் உள்ள பயனாளிகளுக்கு மிகவும் உதவுகின்றன.
செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு 1990 இன் இறுதியில் உலகத் தரமுடைய செயற்கை அவயவங்களைத் தயாரிக்கும் பொலிப்புறொப்பலீன் தொழில்நுட்பத்தை யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தியது. ஐ.சி.ஆர்.சி.யின் பங்களிப்புடன் பயனாளிகளுக்கு இலவசமாகவும் வழங்கி வருகிறது. கடந்த 12 மாத காலத்திற்குள் 500 செயற்கை அவயவங்களைத் தயாரித்து வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் நிறுவனத்தின் சேவைகள் அளப்பரியவை.அவையாவன:
1) பல்வேறு காரணங்களால் அவயவம் இழந்தோருக்கு தரமான செயற்கை அவயவங்களைத் தயாரித்து பொருத்துதலும் அவற்றில் பழுதுகளைச் சீர்செய்தலும்.
2) பிறப்பினாலோ போலியோ போன்ற நோய்களினாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நடமாட்டத்திற்குத் தேவையான ஓர்த்தோட்டிக் உபகரணங்களைத் தயாரித்துப் பொருத்துதலும் அவற்றின் பழுதுகளைச் சீர்செய்தலும்
3) விசேட தேவையுடையவர்களுக்கு நடமாடுவதற்கு சக்கர இருக்கைகள், முச்சக்கர வண்டி, நடை தாங்கிகள், ஊன்றுகோல்கள் போன்றவற்றை பொருத்தமான அளவுகளில் தேவைக்கேற்ப வழங்குதலும் திருத்த வேலைகளில் ஈடுபடுதலும்
4) இயன் மருத்துவம், பரிசோதனைகள், சத்திரசிகிச்சை மூலம், முன்பராமரிப்பு ஆலோசனைச் சேவைகள் வழங்குதல்.
5) உடல் ரீதியாக புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு வருமானம் ஈட்டும் வகையில் சுயதொழில் கடனுதவி வழங்கி ஊக்குவித்தல்.
6) பாடசாலை செல்லும் பயனாளிகளுக்கு மாதாந்த கல்வி ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்குதல்.
7) யாழ்.போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணரின் மாதாந்த பரிசோதனை ஆலோசனையை இலவசமாக ஏற்படுத்திக் கொடுத்தல்.
8) செயற்கை அவயவம் பொருத்தி பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இலவசமாக அங்கு தங்குமிட வசதியும் உணவும் வழங்குதல்
9) இதம் நிறுவனத்தின் இலவச உளவளத்துணை சேவையையும் இக்காலத்தில் இந் நிறுவனம் பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றது. இந் நிறுவனத்தின் முகாமைத்துவக் குழு பிரதான உறுப்பினர்களாக Dr.(திருமதி).ஜெ.கணேசமூர்த்தி (தலைவர்), திருமதி.சி.குணரட்ணம் (பிரதித் தலைவர்) திருமதி ஏ.ஏ.அலோசியஸ்(திட்டச் செயலாளர்), Dr.(திருமதி)சு.சிறீதரன், Dr.(திருமதி)செ.தெய்வேந்திரன்(பொருளாளர்) ஆகியோர் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள்.
இவர்களோடு இணைந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரும் ஆலோசகருமான Dr.கே.உமாபதி((MMBS,MS, FRCS, FRCSEd) அவர்களும் மிகப்பெரிய அர்ப்பணிப்புடனான சேவையை ஆற்றி வருகிறார்.
எனவே இவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய அல்லது சேவைகளைப் பெற்றுக் கொள்ள கீழுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளலாம். |