 |
|
|
பாலஸ்தீனத்தின் தலைவராக திகழ்ந்தவர் யாசர் அராபத். இவர் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக 40 ஆண்டுகள் போராடியவர். உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்.
உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட இவர் பாரீசில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பரிதாபமாக இறந்தார்.
இவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி சுஹா அராபத் கருதினார். எனவே அவரது உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. பின்னர் அவை சுவிட்சர்லாந்தில் உள்ள லாசனே பல்கலைக்கழகத்தில் உள்ள கதிரியக்க இயற்பியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
தற்போது அதன் முடிவை அரசு ஆய்வகத்தின் தலைவர் பிரான்கோயல் போசுட் வெளியிட்டுள்ளார். அதில், அவரது ரத்த மாதிரிகளில் பொலோனியம் என்ற கதிரியக்க நச்சு பரவியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், அவர் கதிரியக்க விஷம் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தகவலை அல்-ஜசீரா டி.வி. அறிவித்தது.
பொலோனியம் என்ற கதிரியக்க விஷம் கொடுத்து ரஷியாவின் முன்னாள் உளவாளி அலெக்சாண்டர் விட்வினென்கோ கொல்லப்பட்டார். கடந்த 2006-ம் ஆண்டு லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. |